July 11, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவல் 42 சதவீதமாக குறைந்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் அலையின் போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில் வசித்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா 2 -வது அலையிலும் கோவை மாநகராட்சி பகுதியில்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது.
ஆரம்பத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 65 சதவீதம் பேர் மாநகராட்சி பகுதியில் இருந்தனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 4 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டனர். இதன்மூலம் தொற்று பாதித்தவர்கள் விரைந்து கண்டறியப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தப்பட்டதால் பாதிப்பு விரைவாக குறைந்தது.
இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கொரேனா பரவல் 42 சதவீதமாக குறைந்து உள்ளது. இது கடந்த 2 வாரங்களுக்கு முன் 48 சதவீதம் என்ற அளவில் இருந்தது. மாநகராட்சி பகுதியில் தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதும், வியாபாரிகள், போக்குவரத்து ஊழியர்கள், முன்கள பணியாளர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தபால் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதும் கொரோனா பரவல் குறைய முக்கிய காரணம் என்று சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் மொத்த பாதிப்பில் ஊரக பகுதியான காரமடையில் கொரோனா பரவல் 9.84 சதவீதமாகவும், துடியலூரில் 8.27 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது. சூலூரில் 6.84 சதவீதமாகவும், ஆனைமலை பகுதியில் 4.42 சதவீதமாகவும், தொண்டாமுத்தூரில் 3.35 சதவீதமாகவும் உள்ளது. மதுக்கரை பகுதியில் ஆரம்பத்தில் 9 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போது 4.85 சதவீதமாக குறைந்து உள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.