July 7, 2021
தண்டோரா குழு
ஊரடங்கில் தளர்வுகள் எதிரொலியாக
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் 2 மாத காலத்திற்குள் கொண்டுவரப்படும் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
இதனிடையே மேம்பால பணிகள் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. அதன் பின் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து துவங்கியுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை தற்போது இல்லை.
கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாத காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்றார்.