July 5, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் தூய்மை பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 91வது வார்டுக்குட்பட்ட குளத்துப்பாளையம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் தூய்மை பணியாளர்களிடம், அனைவரும் நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும்.
தூய்மையான மாநகராட்சியாக திகழ தங்களுடைய பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து கோவை புதூர் ஜாமியா நகர் பகுதியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தார்சாலையை பார்வையிட்ட அவர் அதன் தரத்தினை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் முல்லை நகர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்ட நீருந்து நிலையத்தை பார்வையிட்டார்.
அப்போது குனியமுத்தூர் பகுதியில் 7 வார்டுகளுக்கும் மற்றும் குறிச்சியில் 7 வார்டு பகுதிகளுக்கு நீருந்து நிலையம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பணிகளை ஆய்வு செய்தார். அதேபோல் குனியமுத்தூர் அம்மன் கோவில் சாலை சின்ன சுடுகாடு பகுதியில் உள்ள பிரதான கழிவுநீர் உந்து நிலையத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.