• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீண்ட இடைவெளிக்கு பிறகு கோவையில் பேருந்து சேவை துவக்கம் !

July 5, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி கோவையில் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மூன்றாவது அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.‌இந்த நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

குறிப்பாக தொற்று அதிகம் பாதித்த கோவை நீலகிரி ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து வந்தது. தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் பொதுப் போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து தொடங்கியிருக்கிறது.இதற்காக நேற்றைய தினமே அனைத்து பணிமனைகளிலும் பேருந்துகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு ட்ரிப் முடித்த பிறகும் இருக்கைகள், கைப்பிடிகள், படிக்கட்டுகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முக கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்த பின்னரே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது கட்டாயம் முக கவசம் அணிந்திருக்கவும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி 50 சதவிகித பயணிகளை மட்டும் பேருந்தில் அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோவை மாநகர் மற்றும் பொள்ளாச்சி, அன்னூர், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து 625 நகரப் பேருந்துகள், 840 வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் என மொத்தமாக 1425 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு காந்திபுரம் விரைவு பேருந்து நிலையத்தில் இருந்தும், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும்,மதுரை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

இதேபோல உக்கடம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளிமாநில பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து வரும் நிலையில் கேரள எல்லையான வாளையார் வரையிலு, கர்நாடக எல்லையான ஓசூர் வரையிலும் கோவையிலிருந்து அரசு பேருந்து சேவை வழங்கப்படுகிறது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க