June 18, 2021
தண்டோரா குழு
கோவையில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாக குறைந்துள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவையில் கடந்த மாதம் கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதனால் கொரோனா சிகிச்சையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இவர்களில் 25 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைகிறது.
தற்போது 8 ஆயிரம் பேர் மட்டுமே மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இதேபோல் ஊரக பகுதியில் 4 ஆயிரம் பேர் சேர்த்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகளவு காலியாக உள்ளன.
இரண்டாவது அலை குறைந்து வருவதால் தற்போது தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக அனைத்து மார்க்கெட் வியாபாரிகளும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று அறிவித்து உள்ளோம். தற்போது வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது. அலட்சியம் காட்டினால் மூன்றாவது அலைக்கு வழிவகுத்து விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.