June 18, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கிராமங்களில் கட்டுப்படுத்தும் வகையில் கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி அவர்களால் நியமிக்கப்பட்ட காவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட ‘கிராம ஊராட்சி அளவிலான கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு குழு’ ஏற்படுத்தப்பட்டு கிராமப்புற பகுதிகள் கொரோனா தொற்று தொடர்பாக தினசரி வீடுகள் தோறும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் வகையில் தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணித்தல், விரைவாக பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவும், முகக்கவசம் அணியாதிருத்தல் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாதவர்களிடம் அபாரதங்களை வசூலிக்கவும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை கண்காணிக்கவும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
இவ்ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்.பி செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)(பொறுப்பு) மதுரா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.