June 18, 2021
தண்டோரா குழு
சர்வதேச யோகா தினம் விரைவில் வர உள்ள நிலையில் ,வீட்டிலிருந்தபடியே சர்வதேச யோகா போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சிகள் செய்து தன்னை தயாராக்கி வரும் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்த தம்பதியர் சௌந்தர்ராஜன், கவிதா, இவர்களது மகன் நிரஞ்சன். தற்போது பிளஸ் டூ பயின்று வரும் இவர்,தனது ஆறாம் வயது முதலே யோகா பயிற்சி மேற்கொண்டு கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக யோகாவில் பல்வேறு நிலைகளில் திறம்பட பயிற்சி பெற்றதோடு, தேசிய,சர்வதேச அளவுகளில் அத்லெட்டிக் யோகாவில் வெற்றி பெற்று தங்க பதக்கம் உட்பட பல்வேறு பரிசுகள் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.
இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும்,மேலும் கொரோனா கால ஊரடங்கால் அனைத்து சேவைகளும் முடங்கி உள்ள நிலையில் சர்வதேச யோகா போட்டிகளில் கலந்து கொள்ள தன்னை தயார் படுத்தும் விதமாக காந்திமா நகரில் உள்ள தனது வீட்டிலேயே பல்வேறு விதமான யோகாசனங்களை செய்தார்.
கேரம்,ஸ்கேட்டிங் என பல்வேறு விளையாட்டுகளில் சாதித்து வரும் நிரஞ்சன் யோகாவில் டாக்டர் பட்டம் பெற்று,உலகம் முழுவதும் யோகா கலையின் பெருமைகள் குறித்து முறையாக கற்று கொடுப்பதே தமது இலட்சியம் என தெரிவித்துள்ளார். வீட்டிலேயே தன்னை தயார் படுத்தி வரும் நிரஞ்சனுக்கு அவரது பெற்றோர் மற்றும் இளைய சகோதரர் நிர்மல் ஆகியோர் ஊக்கமளித்து வருகின்றனர்.பள்ளிகள்,கல்லூரிகள் இல்லாத நேரத்திலும் தமது நேரத்தை வீணாக்கமால் வீட்டிலேயே இவர் யோகா பயிற்சி செய்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.