June 17, 2021
தண்டோரா குழு
கொடிசியா சிறப்பு சிகிச்சை மையம், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா சிறப்பு சிகிச்சை மையமான கொடிசியாவில் மொத்த படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீர், தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் உற்பத்தி அளவு குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவுகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்களிடம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்கவும், ஆக்ஸிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு கலெக்டர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.