June 13, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 62 வது வார்டு நீலிக்கோணம்பாளையம் பகுதியில் நீண்ட காலமாக உள்ள சாக்கடை பிரச்னையை தீர்க்க கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 62 வது வார்டு வரதராஜபுரம் மேடு, நீலிக்கோணம்பாளையம் பகுதியில் நீண்ட காலமாக மழை நீர் வடிகால் அமைக்காததால் மழை நீர் மற்றும் கழிவு நீர் சரி வர செல்லாததால் சாலைகளில் சாக்கடை நீர் வழிந்தோடுகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக இதே நிலை இந்த பகுதியில் நீடிப்பதாகவும், குறிப்பாக கடந்த இரண்டு முறையும் இந்த தொகுதி எதிர்கட்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களே இருப்பதால் எங்களது கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்க படுவதாக அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் அந்த பகுதி மக்களின் சாக்கடை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார்.