June 11, 2021
தண்டோரா குழு
பெட்ரோல்,டீசல் விலையை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து கோவையில் இளைஞர் காங்கிரஸார் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி விநோத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் என்ற உச்சத்தை தொடும் வகையில் கடுமையான விலையேற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த விலையேற்றத்தை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.
அதன் படி கோவையில் இளைஞர் காங்கிரசார் பெட்ரோல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இதில்,பெட்ரோல்,டீசல் விலையை கட்டுபடுத்த தவறிய மத்திய பாஜ.க.அரசை கண்டித்து விநோத முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன் படி,இரு சக்கர வாகனத்திற்கு பாடையில் மாலை அணிவித்து,மலர் தூவி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர்.இதில் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் இமயம் ரகமத்துல்லா,ஜான்சன், சிக்கந்தர், சம்சுதீன், தனபால், ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டில் மட்டும் 43 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஏறி வரும் சிலிண்டர் உள்ளிட்ட எரி பொருட்களின் விலை ஏறி வருவதால், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனை கட்டுபடுத்த மத்திய அரசு தவறி விட்டதாக இளைஞர் காங்கிரசார் குற்றம் சாட்டினர்.