June 9, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வரும் பொதுமக்களுக்கு அளிக்கும் சிகிச்சை முறைகள் குறித்து செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் 76 வது வார்டு முத்துசாமி காலனி பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்ட அவர், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களிடம் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றதா? தினசரி களப்பணியாளர்கள் வருகின்றார்களா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தெற்கு மண்டல கண்காணிப்பு அலுவலர் ப.காந்திமதி, தெற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.