June 7, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சியினை பொருத்தவரை சென்னை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக பரப்பளவிலும், மக்கள் நெருக்கத்திலும் பெரிய மாநகராட்சியாக விளங்குகின்றது. அதனால் தொற்று பாதிப்பும் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்ளவும், கண்காணிப்பு பணிகளை வார்டுகள் வாரியாக விரிவுபடுத்திடவும், அமைச்சர் பெருமக்களையும், மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலர்களையும், மாவட்ட வருவாய் அலுவலர்களையும் தமிழக முதலமைச்சர் நியமித்துள்ளார்.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் கண்டறியப்படுபவர்களை அவர்கள் சார்ந்த பகுதிகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய பல்வேறு படுக்கைகளுடன் கூடிய பல்வேறு சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளே கொரோனா தொற்றிலிருந்து ஒவ்வொருவரையும் காக்கும் கேடயமாக விளங்குவதால் பொதுமக்களிடத்தில் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 38 மாநகராட்சி பள்ளிகளில் கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2.01 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிப்போர்களை உடனடியாக கண்காணித்து சிகிச்சையளிக்கும் வகையில் மாநகராட்சிப்பகுதிகள் முழுவதிலும் வீடுகள் தோறும் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றிலிருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள குடும்ப உறுப்பினர்கள் வாரியாக விவரம் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இப்பணிகளுக்கு சுமார் 4490 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியாளர்கள் மாநகராட்சியிலுள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலமாக நோய் தொற்று அறிகுறிகள் கண்டறிந்து வருகின்றனர்.
இது தவிர அன்றாடம் நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் சுமார் 100 காய்ச்சல் முகாம்கள் மாநகராட்சி மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. கோவை ஆர்எஸ் புர்த்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 250 தன்னார்வலர்கள் மற்றும் 80 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற போர்கால அடிப்படையிலான பணிகளால் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதுடன், தொற்றில்லா மாநகராட்சி என்ற நிலையினை அடையும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் , உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி,
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பி.ஆர்.நடராஜன், சண்முகசுந்தரம், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கே.வீரராகவ ராவ், மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.