June 4, 2021
தண்டோரா குழு
தொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு அனுமதி அளித்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போசியா சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் உள்துறை, தொழில் துறை அமைச்சர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் சர்வதேச வாணிப அபிவிருத்தி துறை தொழிற்சாலைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை மீண்டும் தொடங்க சிபாரிசு செய்தது. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் தொழிற்சாலைகளுக்கு, குறிப்பாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகம் செய்ய அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து கோவையில் அத்யாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மீண்டும் ஆக்ஸிஜன் சிலிண்’டர் விநியோகம் தொடங்கியுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் சிறு,குறு தொழில்களின் தேவையை கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.