June 4, 2021
தண்டோரா குழு
கோவை மாநகர் காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் அணி பிரிவு சார்பாக சாய்பாபாகாலனி பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த அரசு விதித்துள்ள முழு ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் ஏழை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கோவை மாநகர் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் அணி பிரிவு சார்பாக மாவட்ட தலைவர் ஜெரோம் ஜோசப் தலைமையில் ஆதரவற்றோர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.சாய்பாபாகாலனி பகுதியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள்,ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு முட்டை பிரியாணி,பழங்கள்,மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ,காங்கிரஸ் கட்சி மாநில விவசாய அணி துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சாய்பாபாகாலனி பகுதி நிர்வாகிகள் ஜெயபால், சுப்ரமணி,சிவாஜி லோகு மற்றும் தி.மு.க.வை சேர்ந்த காலனி வினோத் ஆனந்த்,தளபதி மோசஸ்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.