June 3, 2021
தண்டோரா குழு
கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவல் துறையினருக்கு ரூ. 5,000 ஊக்கத் தொகையாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை வேகமாக தமிழகம் முழுவதும் பரவிய சூழலில், மருத்துவத்துறையினர்,காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில்,சுகாதாரத்துறை மற்றும் ஊடவியலாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப் பட்டுள்ளன.இந்நிலையில், தற்போது காவல்துறையினருக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா பெருந்தொற்று, உலகளவில் மட்டுமல்ல இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கோவிட் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.
அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.