June 2, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் நடமாடும் காய்கறி வாகனங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு காய்கறிகளை விறப்பனை செய்வோரின் அனுமதி ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர்
நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை மாவட்டம் முழுவதிலும் செயல்பட்டு வருகின்றது.
அவ்வாறு முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்கள், பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கே வாகனம் மூலம் வார்டு தோறும் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை உழவர் சந்தையில் சேகரம் செய்து அங்கிருந்து வாங்கனங்கள் மூலம் வார்டுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தினம்தோறும் வேளாண் வணிக துறையால் உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
உழவர் சந்தையில் நிர்ணயம் செய்த விலைக்கே விவசாய குழுக்கள், விவசாய நிறுவனங்கள், தனி விவசாயிகள் மற்றும் மாநகராட்சியால் காய்கறி விற்பனை செய்ய அனுமதித்துள்ள மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் முதலியோர் உழவர் சந்தை விலைக்கே விற்க வேண்டும்.
மேலும் இவ்விலைபட்டியலை வாகனத்தின் முன்பிறமும், பின்பிறமும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல் ஒரு சில வியாபாரிகள் நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு அதிக விலைக்கு விற்கப்படும் நபர்களை கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால், காய்கறி விற்பனை செய்ய வழங்கப்பட்ட பாஸ் ரத்து செய்யப்படும். பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும்.
வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
எனவே தற்போது விற்பனை செய்யப்படும் அனைத்து வியாபாரிகளும் உழவர் சந்தை விலைக்கே விற்க வேண்டும் என்றார்.