June 2, 2021
தண்டோரா குழு
கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரை பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 1295 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட பெரியகுளத்தில் ஆகாயத்தாமரை படர்தல், கழிவு நீர் கலத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன.
இந்தநிலையில் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள பெரிய குளத்தின் கரையில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஏற்கனவே கொரோனா நோய்தொற்று அதிகம் உள்ள சூழலில் நகரின் மையப்பகுதியில் உள்ள குளக்கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது நோய்தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.