June 1, 2021
தண்டோரா குழு
குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் கோவை மாநகர காவல்துறையில் ஏற்கனவே இருந்த குற்றப்பிரிவை குற்றப்புலனாய்வுப்பிரிவு என மாற்றி, இனிமேல் குற்ற வழக்குகளில் மட்டும் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் ஆணை பிறப்பித்துள்ளார்.
கோவை மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்களிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு என இரண்டு பிரிவுகள் செயல்படும். அதில், அனைத்து இந்திய தண்டனை சட்டமான ஐ.பி.சி., வழக்குகளின் விசாரணையையும் புலனாய்வுப்பிரிவு மேற்கொண்டு வழக்குகளை தீர்த்து வைக்கும் வரை வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுதல், வழக்கு டைரியை எழுதுதல், நீதிமன்றங்களுக்கு செல்வது, விசாரணைக்கு தொடர்புடைய நிபுணர் அறிக்கைகள், ஆவணங்களை சேகரித்தல், சம்மன் அனுப்புதல், சாட்சிகளை தயாரித்தல் மற்றும் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தொடர் நடவடிக்கை எடுப்பது மட்டும் இனிமேல் புலனாய்வுப்பிரிவின் பணியாகும்.
தற்போது நடைமுறையில் உள்ளபடி உள்ளூர் மற்றும் சிறப்பு சட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் 174 சி.ஆர்.பி.சி., கீழ் பதியப்படும் வழக்குகளின் மீதான புலன் விசாரணையை சட்டம் ஒழுங்கு பிரிவில் மேற்கொள்ளப்பட்டு உரிய முறையில் முடிவு செய்யப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரிவில் பெறப்படும் புகார்களை சம்மந்தப்பட்ட சட்டம் ஒழுங்கு அதிகாரியால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் சார்ந்த அனைத்து விபரங்களுடன் புலனாய்வு பிரிவுக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் பின், புலனாய்வு பிரிவு சம்மந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை ஒரு சிறப்பு அறிக்கையுடன் பெற்று விசாரணையை தொடர்வதோடு, வழக்கு நாட்குறிப்புகள் பராமரிக்கப்பட்டு, விசாரணை முடிந்ததும்,இறுதி அறிக்கையுடன் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அவ்வழக்கில் இறுதி தீர்ப்பு பெரும் வரை புலனாய்வுப்பிரிவு தனது பணியை தொடர வேண்டும்.
தற்போது சட்டம் ஒழுங்கு பிரிவில் விசாரணையில் உள்ள வழக்குகள், கோப்பில் எடுக்கப்படாத வழக்குகளின் விசாரணையை தற்போதைய விசாரணை அதிகாரியால் பூர்த்தி செய்யப்பட்டு, அந்தந்த அதிகார வரம்பு நீதிமன்றங்களிலிருந்து வழக்கு எண்ணை பெற்ற பின்னர் வழக்கு நாட்குறிப்புகள் புலனாய்வுப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். அதன் பின், புலனாய்வுப்பிரிவு அவ்வழக்குகளில் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கும் வரை தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், முதல் தகவல் அறிக்கை முகப்பு பதிவேடு சட்டம் ஒழுங்கு பிரிவில் பராமரிக்கப்பட வேண்டும்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது, பறிமுதல், பாதுகாப்பு மற்றும் விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் புலனாய்வுப்பிரிவுக்கு வழங்க வேண்டும். விசாரணை குழுவை சம்மந்தப்பட்ட குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள் மேற்பார்வையிட வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஆணையர்கள் வழக்கு நாட்குறிப்பு பதிவேடு, பொருள் குற்ற பதிவேடு, பாரி குற்ற அறிக்கை மற்றும் நிலுவையில் உள்ள விசாரணை வழக்குகளை சம்மந்தப்பட்ட காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள் அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வழக்குகளின் வழக்கு நாட்குறிப்பு பதிவேடு, பாரி குற்ற பதிவேடு , பாரி குற்ற முன்னேற்ற அறிக்கை ஆகியவைகளை குற்றப்பிரிவு உதவி ஆணையர்களால் பராமரிக்கப்பட வேண்டும்.இந்த புதிய நடைமுறைக்கான தகுந்த ஆவினர்களை பணியமர்த்தும் ஆணை தனியாக பிறப்பிக்கப்படும் என்றும், புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளை எவ்விதமான பாதுகாப்பு அலுவல்களுக்கும் காவல் ஆணையாயரின் முன் அனுமதியில்லாமல் பயன்படுத்தக்கூடாது என ஆணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு, பாதுகாப்புப்பணி, சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் ரோந்து அணிவகுப்பு, குற்றத்தடுப்பு, சமூக பந்தம், சமுதாய களப்பணி, நிலைய பதிவேடுகளை பராமரித்தல், மாநகர காவல் அலுவலகத்துடனான கடித போக்குவரத்து மற்றும் பிற நிர்வாக பணிகள் தொடர்பான அனைத்து பிற பணிகளும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தால் கவனிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.