May 28, 2021
தண்டோரா குழு
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் கேர் மையத்தை அமைச்சர்கள் சக்ரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் நோயாளிகளுக்கு தனிமை மையங்கள் மற்றும் படுக்கை வசதி கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நோயாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின் ஜூவல் ஒன் சார்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாயா வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. இதனை மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இது குறித்து, எமரால்டுஜூவல் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் கூறுகையில்,
இம்மையத்தில் 290 படுக்கைகளும் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் கூடிய இந்த மையத்தில் அனுமதிக்கபடும்,கொரோனா நோயாளிகளுக்கு சத்துள்ள உணவு,அவர்களது மன நலம் பேணுதல்,அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளுதல் ஆகிய அம்சங்களில் இம்மையம் தனிப்பட்ட சுவனம் செலுத்த உள்ளதாகவும் மேலும் இங்கு படுக்கை வசதி , ஃபேன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மையத்தில் கூடுதலாக நவீன வை ஃபை , DTH , புரொஜக்டர் வசதிகள் , செல்போன் சார்ஜிங்பாயிண்ட்ஸ் , விளையாட்டுகள் முதலான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.