May 25, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறப்பாக தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கின்றனர்.
இதையடுத்து மாநகராட்சி பகுதியில் தொற்றை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக சளி, காய்ச்சல் கண்டறியும் பணியுடன் பொதுமக்களின் உடலில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் 1,500 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொரோனா இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதால் அவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் வீடு, வீடா பொதுமக்கள் உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிடும் 1,500 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்களுக்கு 2 பேருக்கு ஒரு ஆக்சி மீட்டர் வீதம் வழங்கப்படுகிறது. இந்த பணியாளர்கள் பொதுமக்களின் விரலில் ஆக்சி மீட்டரை பொருத்தி ஆக்சிஜன் அளவை கணக்கிடுவார்கள். ஆக்சிஜன் அளவு 95க்கு கீழ் இருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.