May 25, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராமங்களிலும் கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு குழு அமைத்து ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஆட்சியர் நாகராஜன் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன்ஒருபகுதியாக கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டால் நியமிக்கப்பட்ட காவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.
வட்டார மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்வார்கள். இவர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா வைரஸ் தொற்று கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். கிராம ஊராட்சி அளவில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்திட அதற்கான இடம் தேர்வு செய்ய வேண்டும். தொற்ற உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள முடியாதவர்கள் இந்த மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த சிகிச்சை மையத்திற்கு வருபவர்களுக்கு தேவையான உணவு வழங்க வேண்டும். கிராமங்களில் கூட்டம் கூடுவதை கண்காணிக்க வேண்டும். கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.