May 25, 2021
தண்டோரா குழு
மூன்று மாத கால மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு டாக்ட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் மிகப்பெரும் வேலை வாய்ப்பை குறு, சிறு தொழில் முனைவோர்கள் வழங்கி வருகிறார்கள். முதல் அலை கொரோனா தொற்றில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வந்த தொழில் முனைவோர்களுக்கு இரண்டாம் அலை கொரோனா தொற்று கடுமையான இழப்பை தந்துள்ளது. இந்த கடுமையான நெருக்கடியில் உள்ள குறுந்தொழில்களை பாதுகாக்க
கடந்த ஏப்ரல் முதல் மூன்று மாதம் வரை தொழில் முனைவோர்களுகான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும் மூன்று மாதத்துக்கு 50 சதவீதம் மின் கட்டணத்தில் மானியம் வழங்கிட வேண்டும். குறுந்தொழில்களை பாதுகாக்க தனி கடன் திட்டத்தை அறிவித்து குறுந்தொழில்களின் ஆண்டு வருமானம் கணக்கு எடுத்து அதில் 25 சதவீதம் கடன் 5 சதவீதம் வட்டியில் தமிழக அரசு கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு, மத்திய அரசிடம் அனைத்து விதமான கடன்களை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாதம் கால அவகாசம் பெற்று தரவேண்டும். அதற்கான வட்டியையும் தள்ளுபடி செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.