May 17, 2021
தண்டோரா குழு
மூலப்பொருட்களின் விலை உயர்வால் அதன் விற்பனையாளர்கள் பெரும் லாபமடைந்து வருகின்றனர். துரதிஷ்டமிக்க குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் நஷ்டத்தை சந்தித்து, பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என 19 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்டீல் நிறுவனங்கள் இம்மாத தொடக்கத்தில் ரோல்டு காயில் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.4500-ஆக உயர்த்தின. இம்மாதத்தின் இடைப்பட்ட காலத்துக்கு பிறகு மற்றுமொரு விலை உயர்வை எதிர்பார்க்கலாம். அதோடு சேர்த்தால், கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது ஸ்டீல் விலையானது 100 சதவீத உயர்வை எட்டி விடும். காப்பர் விலையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 90 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோல் அலுமினியம், துத்தநாகம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை 30 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதே விலை உயர்வு ரப்பர் மற்றும் அனைத்து பிளாஸ்டிக் மூலப்பொருட்களிலும் ஏற்பட்டுள்ளது.
தாறுமாறாக உயர்த்தப்படும் மூலப்பொருட்களின் இத்தகைய விலை உயர்வால் மூலப்பொருள் விற்பனையாளர்கள் பெரும் லாபமடைந்து வருகின்றனர். துரதிஷ்டமிக்க குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் நஷ்டத்தை சந்தித்து, பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறு,சிறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என நினைத்தால், மத்திய அரசு இவ்விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் சாதிக்காமல், உடனடியாக தலையிட்டு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தாறுமாறாக உயர்த்தப்படும் மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.குறு,சிறு நிறுவன தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூலப்பொருட்கள் விலை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை குழுவை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
நிலையான விலையை உறுதி செய்வதுடன், ஆண்டுக்கு ஒருமுறை மூலப்பொருட்கள் விலையை சீரமைக்க வேண்டும். அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட விலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் மூலப்பொருட்கள் மானிய திட்டத்தை பதிவு பெற்ற குறு, சிறு நிறுவனங்களுக்கென கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.