May 9, 2021
தண்டோரா குழு
நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் சொந்த ஊர் செல்வதற்காக மக்கள் கோவையில் உள்ள பேருந்து நிலையங்களில் குவிந்தனர்.
கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தென்னிந்தியாவின் மான்சிஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் தொழிற்சாலைகள் அதிகமாக காணப்படுகிறது. இங்கு பணி புரியும் மக்கள் நாளை முழு ஊரடங்கு என்பதால் இங்கு வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல தொடங்கியுள்ளனர்.
ஊருக்கு செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்தது. அதனால் கோவை, சிங்காநல்லூர் மற்றும் காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பெரும்பாலானோர் பேருந்துகள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. அதனால், இன்று கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏராளமான மக்கள் இருசக்கர வாகனங்களிலும் பயணித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.