May 8, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனை அடுத்து கோவையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவையில் இருந்து தொலைதூரம் செல்லும் பேருந்துகள் காலை 5 மணி முதல் காலை 11 மணிக்குள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,கொரோனா பரவல் அதிகரிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, கோவையில் தங்கி பணிபுரியும் மதுரை, திருச்சி, சேலம், விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர், காலை முதல் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்தனர்.
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்கள் மற்றும் சிங்காநல்லூரில் இருந்து மதுரை, கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டன.