May 6, 2021
தண்டோரா குழு
சர்ச் ஊழியர்களின் பி.எப்., தொகை 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பிஷப்பை கைது செய்ய, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவை வெள்ளலுார் சி.எஸ்.ஐ.,, தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் செர்சோம் ஜேக்கப், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில், கடந்த மாதம் புகார் அளித்தார்.அதில், கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல கட்டுப்பாட்டில் 125 கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களில் பணியாற்றும் பாதிரியார் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை, அவர்களது கணக்கில் செலுத்தாமல் 25 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பிஷப் திமோத்தி ரவீந்தர்,62, பொருளாளர் செல்வகுமார், முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ் மற்றும் முன்னாள் பிஷப் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.அதன் பேரில், பிஷப் திமோத்தி ரவீந்தர் உள்பட ஐந்து பேர் மீது, மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், பிஷப் திமோத்தி ரவீந்தர், முன்ஜாமின் கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் வாதிடஅவகாசம் கேட்டதை தொடர்ந்து, மனு மீதான விசாரணை, வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை, பிஷப்பை போலீசார் கைது செய்ய தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.