May 5, 2021
தண்டோரா குழு
தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மக்கள் இருப்பு இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கபட்டு இருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாகவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அரசு கலைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அங்கு தினந்தோறும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி ஊசி செலுத்தி வந்தனர்.
இதற்கிடையில், நேற்று 100க்கும் மேற்பட்டோர் காலை முதலே தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அரசு கலைக்கல்லூரி முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் இன்று தடுப்பூசி முடிவடைந்துவிட்டது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் வரிசையில் நின்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று ஊசி போடும் பணிகள் நடைபெறவில்லை. தடுப்பூசிகள் இல்லை என கரும்பலகையில் எழுதப்பட்டு இருப்பதால் ஊசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.