May 3, 2021
தண்டோரா குழு
தேர்தல் அறிக்கையில் சொன்னதை எல்லாம் மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசின் உதவியுடன் தொகுதிக்கு பணிகளை செய்வோம் என கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றியாளரும் பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் வி கே கே மேனன்ரோட்டில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றதை அடுத்து முதற் முறையாக வந்ததையடுத்து முழக்கங்கள் எழுப்பி, மலர்த்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன்,
கோவை சட்டமன்ற தொகுதியில் தனக்காக வாக்களித்த, தேர்தல் பணியாற்றிய பாஜக, அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கும், குறிப்பாக, இந்த பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற பெரிதும் உதவிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.வாக இருந்த அம்மன் அர்ஜூனன் ஆகியோருக்கு நன்றிகள் தெரிவித்தவர், தன்னை போன்றவே வெற்றிப்பெற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டார்.
எந்தவித கூட்டங்கள் இல்லாமல் தொகுதி மக்களுக்கு நன்றி, திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து செயல்படுவோம் என்றவர், தற்போது மக்களுக்கு உதவிகள் தேவைப்படுவதாகவும், மக்களுக்கு உதவி செய்வதை தான் இந்த நேரத்தில் வெற்றி கொண்டாட்டமாக பார்ப்பதாகவும் தெரிவித்தவர், எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து அழுத்தம் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அது பாஜக கட்சி தலைமை தான் முடிவு செய்யும், தற்போது தான் எம்.எல்.ஏ., தான் என்று பதிலளித்தார்.