April 30, 2021
தண்டோரா குழு
இந்தியாவில் விற்கப்படுகின்ற தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் பதியப்பட வேண்டும் என்று பல்வேறு நுகர்வோர் தரப்பிலும் நாடு முழுவதும் கோரிக்கை எழுந்து வந்தது. மத்திய அரசு இதனை அமல்படுத்த முடிவு எடுத்தது, இதற்கு பல்வேறு நகை வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதும் விற்கப்படுகின்ற அனைத்து நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம் பெற வேண்டும்.இதுதொடர்பாக அந்தந்த நகை வியாபாரிகள் இந்திய தர நிர்ணய அமைவனனதில் (பி.ஐ.எஸ்) பதிவு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 2 கிராம் முதல் விற்கப்படுகின்ற அனைத்து தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா.லோகு கூறுகையில்,
‘தமிழகத்தில் விற்கப்படுகின்ற சில தங்க நகைகள் மீது ஏராளமான புகார்கள் நுகர்வோர் அமைப்புகளுக்கு வருகின்றன. அவ்வாறான தங்கங்களை பரிசோதனை செய்வதற்கு போதிய ஆய்வுக்கூடங்கள் கோவையில் இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே தங்க நகை பரிசோதனை மையம் உள்ளது. அதுவும் போதிய விளம்பரம் செய்யாததால் பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்தது. இதனால் தங்கத்தில் கலப்படம் மற்றும் தரம் குறைவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண முடியாத நிலை இருந்து வந்தது.
தற்போது மத்திய அரசு பிறப்பித்த இந்த உத்தரவால் தங்க நகை வாங்குபவர்களுக்கு தரமான நகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் நகைகளை அதன் தரத்தை பரிசோதனை செய்ய இந்திய தர நிர்ணய அமைவனம் கூடுதல் பரிசோதனை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக பொதுமக்கள் அறியும் வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,’’ என்றார்.