April 30, 2021
தண்டோரா குழு
கோவை – கன்னூர் இடையே இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயில், மே 1ம் தேதி முதல் வாரத்தில் சில நாட்கள் கோவை – பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கேரள மாநிலம் கஞ்சிக்கோடு – பாலக்காடு இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கோவை – கன்னூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், கோவை – பாலக்காடு இடையே மே 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை வாரத்தில் சில நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி, கோவை – கன்னூர் தினசரி சிறப்பு ரயில் மே 1 முதல் 31ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, செவ்வாயக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவை – பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் பாலக்காடு – கன்னூர் வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.
இதேபோல், கன்னூர் – கோவை தினசரி சிறப்பு ரயில் மே 1 முதல் 31ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் பாலக்காடு – கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது.இந்த நாள்களில், கன்னூர் – பாலக்காடு இடையே மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.