April 29, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கூறியிருப்பதாவது:
தோட்டக்கலை துறையின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரையிலும், இதர விவசாயிகள் 5 ஹெக்டர் வரையிலும் பயன்பெறலாம்.
கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பாசன குழாய்கள் நிறுவ ஒரு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம், ஆயில் என்ஜின் அல்லது மின்மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரம், நீர்தேக்க தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
எனவே விருப்பம் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளர்.