April 28, 2021
தண்டோரா குழு
வாரச் சந்தைகளில் கூட்ட நெரிசல் கண்டறியப்பட்டால் மூடப்படும்
மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு நோயுடன் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் வீடுகள் அடைத்து வைக்கப்படும்.
அவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய சேவைகள் மாநகராட்சி மூலம் வழங்கப்படும். ஒரே தெருவில் 3 வீடுகளுக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த தெரு முழுமையும் தடுப்பு அமைத்துக் கண்காணிக்கப்படும்.தடுப்பு அமைத்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
நோய் பரவுதல் அதிகம் காணப்படும் பகுதிகளில் வாரச் சந்தைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செயல்படத் தவறும் பட்சத்தில், அது முழுமையாக மூடிவைக்கப்படும். உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளின் முன் மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் இல்லாமல் நின்றிருந்தால் அந்த கடைகள் ஒரு வார காலத்திற்கு மூடி வைக்கப்படும்.
இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.