April 26, 2021
தண்டோரா குழு
வரும் 2ஆம்தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதோடு,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய கோரி புதிய தமிழகம் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட தலைமை முகவர் சங்கர் குரு தலைமையில் வழங்கப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.இதில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் தொண்டு கொள்கை நல்ல நோக்கங்கள் என எதுவும் இன்றி தேர்தல் என்ற பெயரில் ஜனநாயகத்திற்கு விரோதமாக அனைத்து தொகுதிகளிலும், சந்தையில் பொருட்களை ஏலம் எடுப்பது போலவும்,பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
முதல்முறையாக தேர்தல் நடைபெற்ற அன்று வாக்குச்சாவடிக்கு முன்பு கவுண்ட்டர்கள் அமைத்து 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வாக்களர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்களின் வாக்குகள், பணத்தால் பெறப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். எனவே தற்போது நடைபெற்றுள்ள இந்த தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்ற தேர்தல் இல்லை. ஊழல்படுத்தப்பட்டு நடைபெற்ற தேர்தலாக இருந்ததால், தேர்தல் ஆணையம் இதனை அனுமதிக்கக் கூடாது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும் ஆணையத்திற்கு இருக்கிறது.
எனவே வருகின்ற மே மாதம் 2ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.வாக்கு எண்ணிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கக் கூடாது. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்.,மேலும் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.