April 26, 2021
தண்டோரா குழு
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த பெள்ளாதி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் வழிப் பாதையை ஆக்கிரமித்து அங்கு வீடுகள் கட்ட படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் இன்று மனு அளித்தனர். இதனை தொடர்ந்து சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறுகையில்,
மேட்டுப்பாளையத்தை அடுத்த பெள்ளாதி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் வழிப்பாதை உள்ளது. இந்த நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தும், கருப்பராயன் கன்னிமார் கோவில் இடத்தை ஆக்கிரமித்தும் வீடுகளைகட்டி வருகின்றனர் ரியல் எஸ்டேட் அதிபர்கள்.மேலும் 400 அடி அகலம் 25 அடி ஆழமுள்ள செக் டேமையும் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த முறையும் நடவடிக்கை இல்லை என்றால் ஆக்கிரமிப்புகளை விவசாயிகளே அகற்றுவோம்.” என்றார்.