April 24, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் வெளியே சென்றதால் அவர் மீது மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட இளங்கோ நகர் அருகே நேரு நகர் பகுதியில் வசித்து வந்த 55 வயது நபர் ஒருவர் கடந்த 14ம் தேதி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா அறிகுறி தென்பட்டதால் மாதிரி பரிசோதனை எடுத்துக் கொண்டார். அவருக்கு 16ம் தேதி வந்த முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பின் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர்
தொற்று லேசான பாதிப்பாக இருந்ததால் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டார்.
கோவை மாநகராட்சி கமிஷனர் உத்திரவின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் அந்தந்த மண்டலத்திற்கு அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டில் இருக்கிறார்களா? என்று உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல 34வது வார்டு துப்புரவு பணி மேற்பார்வையாளர் மேற்கண்ட நபரின் முகவரிக்கு நேரில் சென்று பார்த்த போது அந்த நபர் வீட்டில் இல்லை என்பது உறுதியானது. மேலும் அவர் ஹோப்காலேஜில் இருப்பதாக தெரிய வந்தது. எனவே மேற்கண்ட நபர்
தனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படஅறிவுறுத்தப்பட்ட நிலையில் வெளியில் சென்றுள்ளார். எனவே அவர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இதுபோன்று மருத்துவரால் தனிமைப்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட நபர்கள் யாரும் வெளியில் சென்றால் அவர்கள் மீது
வழக்கு தொடர்ந்து தக்க மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சிகமிஷனர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.