April 24, 2021
தண்டோரா குழு
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:
விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இதில் முதல் 3 இடங்களுக்குள் பிடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மூத்தோர் போட்டிகள் மற்றும் அழைப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியாது. வேறு எந்த திட்டத்தின் கீழும் ஓய்வூதியம் பெறக்கூடாது. இணையதளத்தில் பதிவு செய்த பின்னர், விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் விளையாட்டு உண்மை சான்றிதழ்ளை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் காண்பித்து, நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே தகுதியான நலிந்த விளையாட்டு வீரர்கள் வரும் 19-ம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.