April 20, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நிரந்தரத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 3 முதல் 7 ஆம் தேதிக்குள் அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.இந்நிலையில், சமீப காலமாக ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்கப்படாததால்,ஒப்பந்தப் பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில்,தொடர்ந்து முறையாக ஊதியம் வழங்கப்படுவதை கண்டித்து வேலைநிறுத்த போராட்டம் நடத்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரத் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் கடந்த 3 மாதங்களாக ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக, அந்தந்த வார்டு அலுவலகங்களில் போராட்டம் மேற்கொண்டும், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது,100 வார்டுகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து,முறையாக ஊதியம் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து விரைவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.