April 2, 2021
தண்டோரா குழு
அதிமுகவில் அண்ணாவின் கொள்கைகளை கைவிட்டு அமித்ஷாவை பின்பற்ற துவங்கிவிட்டனர் என காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவார்.நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கின்றோம். என தெரிவித்த அவர்,
பா.ஜ.க அரசு நீட் தேர்வை மாநிலங்களில் நிர்பந்தப்படுத்தி திணிக்கின்றது.உ.பி முதல்வர் யோகி ஆதி்த்யநாத் எங்கு சென்றாலும் பிரச்னை ஏற்படுகின்றது.
யோகி ஆதித்யநாத் செல்லும் இடங்களில் மக்களை மதரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிளவு படுத்துகின்றார்.உ.பி மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு பாலியல் வழக்குகளில் அவர் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. காங்கிரஸ் தலைவர்கள் அங்கு சென்று போராடிய பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது
25 சதவீத குற்ற சம்பவங்கள் உ.பி மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. இவற்றை தடுக்க முடியாத யோகி ஆதித்யநாத், பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழகத்திற்கு வந்து பேசுகின்றார்.
குறிப்பாக தொழில் நகரான கோவையில் தங்க நகை தொழில், ஆட்டோ மொபைல் ,சிறு குறு தொழில் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சியில் ஜி.டி.பி குறைந்துள்ளது. ராஜீவ் காந்திக்கு பின் அவர்கள் குடும்பத்தில் யாரும் பிரதமர் ஆக வில்லை என்றார்.
மேலும், காங்கிரஸ் பிரதமர்கள் பெயரை பட்டியலிட்ட அவர், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பா.ஜ.க நுழைய அனுமதிக்ககூடாது எனவும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் பாம்பின் விஷம் போன்றவர்கள் எனவும் அவர்கள் தென்னிந்தியாவிற்கு எதிரானவர்கள் எனவும் தெரிவித்தார்.பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் பொய்யர்கள் என தெரிவித்த அவர்,
பணமதிப்பிழப்பு. லாக்டவுன் ஆகியவற்றுடன் ஜி.எஸ்.டியும் கொண்டு வந்து மக்களை நெருக்கடிக்கு ஆட்சியில் இருப்பவர்கள் உள்ளாக்குகின்றனர் எனவும் தெரிவித்தார்.
பாஜகவினர் உடல் பலம், அரசியல் பலம் ஆகியவற்றுடன் சிபிஐ , அமலாக்க துறை உட்பட்ட அரசு இயந்திரங்களையும் பிறரை அச்சுறுத்த பயன்படுத்துகின்றது எனவும் தெரிவித்த அவர்,தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை கூட இந்தி மொழியில் வெளியிடுகின்றனர் என கூறிய அவர், ஏன் தமிழில் வெளியிட வில்லை என கேள்வி எழுப்பினார். பா.ஜ.க தமிழக கலாச்சாரத்தை, சுயமரியாதையை அழிக்க பார்க்கின்றது என குற்றம் சாட்டிய மல்லிகார்ஜுன கார்கே,அதிமுகவில் அண்ணாவின் சிந்தனைகள கைவிட்டு விட்டு, அண்ணாவிற்கு பதிலாக அமித்ஷாவை அதிமுகவினர் பின்பற்றுகின்றனர் என காட்டமாக விமர்சனம் செய்தார்.
இந்த ஆட்சியில் சிறு குறு தொழில்கள், ஐவுளித்தொழில்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும்,கொரொனா நேரத்தில் முன்னறிவிப்பு இன்றி கொண்டு வரப்பட்ட லாக்டவுன் காரணமாக மக்கள் துன்பங்களை அனுபவித்தனர்.அமித்ஷா, மோடி ஆகியோர் இதற்கு முன்பு கொடுத்த ,வங்கி கணக்கில் 15 லட்சம் , 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு போன்ற பொய் வாக்குறுதிகள் போலவே இப்பவும் வாக்குறுதிகள் கொடுக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் எதிரணியினை
மிரட்டவும், அச்சுறுத்தவும், அவர்களின் வலிமையை குறைக்கவும் ஐ.டி.சோதனைகள் நடத்தப்படுகின்றது என தெரிவித்த அவர் இதை கடந்து தமிழகத்தில் காங்கூட்டணி வெற்றி பெறும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.