April 2, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளர் கமல்ஹாசன் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கல்லுக்குழி மக்களை நேரில் சந்தித்தார்.
தொழில் நகரமான கோவையில் வளர்ச்சியடைந்த பகுதியான ரேஸ் கோர்ஸ் இருக்கும் வார்டு 71- ல் தான் கல்லுக்குழி பகுதியும் வருகிறது. ஆனால் கல்லுக்குழி மக்கள் பல ஆண்டுகளாக கழிப்பிட வசதி கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அந்த பகுதியில் பொதுக்கழிப்பிட வசதியும் கிடையாது.ஸ்வச் பாரத் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நாட்டில் தான் கழிவறைகள் இல்லாத பகுதிகளும் இருக்கிறது. சுங்கம், நிர்மலா கல்லூரி, ரேஸ் கோர்ஸ் ஆகிய பகுதிகளுக்கு அருகில் உள்ளது தான் கல்லுக்குழி. 500 குடும்பங்களுக்கு மேல் இங்கு வசிக்கிறார்கள்.
அனைவரும் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், ஆஸ்பட்டால்,தகரங்கள் கொண்ட கூரைகளுக்கு கீழ் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். நகரத்தில் உள்ள குப்பைகளை இப்பகுதியில் கொட்டுவது, சுகாதரமான குடிநீர் வசதி இல்லாதது, போன்ற பல பிரச்சனைகளுடன் வாழ்ந்து வரும் மக்களை கமல் ஹாசன் சந்தித்து அந்த பகுதியை நேரில்பார்வையிட்டார். குறுகலான சாலைகள் இல்லாத தரையில் இறங்கி நடந்த கமல் ஹாசனை மக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.
மக்கள் அவரிடம்‘ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும், எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. எங்கள் பிரச்சனைகளை யாரும் கவனிப்பதில்லை. தாழ்வான பகுதியில் இருப்பதால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படையான வசதிகள் இல்லை. கழிவறைகள் இல்லாமல் தான் இவ்வளவு காலம் வாழ்ந்து வருகிறோம். என்று அவரிடம் தெரிவித்தனர்.
கமல் ஹாசன் மக்களிடம் பேசுகையில்,
“நான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை. உங்களை சந்தித்து உங்களின் தேவைகள் என்ன என்பதை கேட்க வந்திருக்கிறேன். உங்களின் தேவைகளை நீங்கள் கேட்பது உங்கள் உரிமை .அதை நினைவுப்படுத்துவதே என் கடமை. உங்களுக்கு அடிப்பை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ” என்றார்.