March 29, 2021
தண்டோரா குழு
கோவையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளில் இதுவரை 2700 நபர்கள் தபால் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு முறையினை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இம்முறை கொரோனா வைரஸ் தொற்றினை கருத்தில் கொண்டு 80வயதிற்கும் மேற்பட்டோர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என பல்வேறு இடங்களில் தபால் வாக்குப்பதிவிற்கு அனுமதி அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்குட்ட பகுதிகளில் 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 249 நபர்களும், மாற்றுத்திறனாளிகளில் 605 நபர்களும் என மொத்தம் 7 ஆயிரத்து 854 நபர்கள் தபால் வாக்குப்பதிவு மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்ட குழுக்கள் மூலம் தபால் வாக்குச்சீட்டுகள் அவர்கள் குடியிருப்புகளிலேயே நேரடியாக வழங்கி வாக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் படி நேற்று வரை இதுவரை 2700 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர்.