March 20, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். சிவானந்தா காலனி பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவருக்கு பாஜ தொண்டர்கள் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டாடாபாத், ஆறுமுக்கு, காந்திபுரம் 7வது வீதி உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் சென்ற வானதி சீனிவாசன், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிதான் அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.மத்திய- மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கிய அவர், தாமரை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
கோவை தெற்கு தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் கோவை ராம்நகரில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் கோவையில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன.சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன.புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவை விமானநிலைய விரிவாக்கம் செய்யும் பணி நிறைவு பெற்றதும் இந்த மாவட்டத்தில் கூடுதலாக 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அ.தி-.மு.க.வினர் எப்போதும் கூட்டணி கட்சியின் வெற்றிக்காக பாடுபடக்கூடியவர்கள்.எனவே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை அனைவரும் இணைந்து களப்பணியாற்றி 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., பா.ஜனதா நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், நந்தகுமார், சபரி கிரிஷ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கமலுக்கு பழக்கூடை அனுப்பிய வானதி சீனிவாசன்
கோவையில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமலஹாசன் காலில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் தனியார் ஹோட்டலில் தங்கி ஒய்வு எடுத்து வருகிறார்.இதனை அறிந்த வானதி சீனிவாசன் தன்னை எதிர்த்து போட்டியிடும் எதிர் வேட்பாளர் கமல்ஹாசனுக்கு நலன் பெற வேண்டி பழக்கூடையை பா.ஜ.க மாவட்டத் தலைவர் நந்தகுமார் இடம் கொடுத்தார். அவர் கமலஹாசனிடம் வழங்கினார்.