March 20, 2021
தண்டோரா குழு
கோவை புனித மைக்கல் தேவாலயத்தின் மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸை சந்தித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கரடிமடை பகுதியில் நேற்று தனது முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில் சென்ற அவர், அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடையே எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் இன்று காலை டவுன்ஹால் பெரிய கடைவீதியில் உள்ள புனித மைக்கல் தேவாலயத்துக்கு சென்ற அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அங்கு மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸை சந்தித்து பேசினார். அப்போது புனித மைக்கல் திருச்சபை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது அதிமுகவின் வடக்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். ஜெயராம், கிணத்துக்கடவு வேட்பாளர் தாமோதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.