March 19, 2021
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை நட்சத்திர ஓட்டலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
இதுகுறித்து கமல்ஹாசன் பேசுகையில்,
ஆட்சி காலத்தில் நடந்த தவறுகளுக்கு பேண்டேஜ் போடுவது இல்லை எங்கள் தேர்தல் அறிக்கை. தொலை நோக்கு பார்வையுடன் வெளியீடப்படும் தேர்தல் அறிக்கை. இந்த தேர்தல் அறிக்கை ஒரு உன்னதமான அறிக்கை. நல்ல திட்டங்களை நிறைவேற்றிவிட்டாலே தமிழகம் முன்னேறிவிடும்.
இலவசம் என்பது அரசியல் கட்சிகள் மக்களுக்கு கொடுப்பதில்லை. வாசிங் மெசினை நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதாக தான் அர்த்தம். இதற்கான பில் உங்கள் தலையில் தான் வரும். தமிழகத்தின் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் அடைக்கப்பட்டு வளமாக்கப்படும். போக்குவரத்து துறை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லப்படும். அதற்கு என்ன வழி போக்குவரத்து ஊழியர்கள் பங்குதாரர்களாக ஆக்கப்படுவார்கள்.
இல்லத்தரசிகளுக்கு ரூ.1000, ரூ.1500 தருகிறேன் என்கிறார்கள் இது எப்படி சாத்தியம். நாங்கள் அவர்களது திறமைகளை கண்டறிந்து அதை ஊக்குவித்து அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்வோம். இது ஒரு தனித்துவமான தேர்தல் அறிக்கை. மக்கள் கேண்டீன் திறக்கப்படும். இது மக்களுக்கு தேவையானவற்றை நல்ல விலையில், நியாயமான விலையில் தரப்படும். இதுவும் அம்மா உணவகமும் ஒன்றல்ல.
விவசாய பொருட்கள் மதிப்புக்கூட்டப்பட்டு பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யப்பட்டு வருமானத்தை பெருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலுமே மோனோ, மெட்ரோ ரயில் திட்டங்கள் வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. தமிழகம் முழுவதும் பெரு நகரங்களில் மெட்ரோ ரயில்கள் ஒடும். தலைநகரம் மட்டும் செழிப்பாக.இருந்தால் போதாது. அனைத்து மாவட்டகளும் செழிப்பாக வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி என்பது போர்டு போடுவது இல்லை அதனை செயல்படுத்துவதில் உள்ளது. இன்னும் கோவைக்கான முழு திட்டம் இல்லை. தமிழகம் முழுவதுமே இல்லை.
அமைப்பு சார தொழிலாளர்கள் ஒரு அமைப்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். மநீம பொருளாளர் வீட்டில் ரைய்டு என்பது அவரும் ஒரு தனி நபர் தான். மநீம என்பதால் கணக்கு எண்ணிக்கை அதிகமாக காட்டப்படுகிறது. அவர் மீது வந்த ரைடு தனி நபர் மீது உள்ள ரைடு. பாஜக கூட்டணியில் இல்லாத கட்சி சார்ந்தவர்களிடம் ரைடு. லோக் ஆயுத்த பலப்படுத்தப்படும். கோவையில் எந்த நேரமும் எது வேண்டுமானலும் நடக்கலாம் என்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. அந்த நிலை வரக்கூடாது.
பின்னர் கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.
அவர் பேசும்போது,
வரி வருமானத்தில் இருந்து வளர்ச்சியின் பாதைக்கு அழைத்து செல்லக்கூடிய தேர்தல் அறிக்கை இது. விவசாயத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேறி செல்லக்கூடிய அறிக்கை இது.
தனி நபர் வருமானம் 2 மடங்கு உயர்த்தப்படும்.ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். மாதம் ரூ.60 ஆயிரம் கிடைக்கும் வரை வருமானம் உயர்த்தப்படும். தற்போது ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே உள்ளது.
50 லட்சம் பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்தல் அறிக்கை 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு பார்வை. ஏழ்மை ஒழிக்கப்பட்டு வறுமை ஒழிக்கப்பட்டு வளம் கிடைக்கக்கூடிய தேர்தல் அறிக்கை.
நீட் சட்டத்தில் எந்த இடத்திலும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் தான் தேர்வு நடத்த வேண்டும் என்பது இல்லை. இது தமிழக அரசுக்கு தெரியாது. பா.ஜ.க இருக்கும் வரை நீட் இருக்கும். எனவே ஸ்டேட் பாடத்திட்டத்தில் எங்கள் பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படும். ஸ்டேட் எண்ட்ரன்ஸ் தேர்வு நீட் தேர்வுக்கு பதிலாக நடத்தப்படும்.
சமூக நீதி என்பது அனைவருக்குமானது. அனைவருக்கும் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்பது எங்கள் இலக்கு. ஆசிரியர்களுக்கு டிரஸ் கோடு தரப்படும். வேறு பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். அரசு பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்.
படித்த படிப்புக்கான வேலைவாய்ப்பு இல்லை. படித்த படிப்புக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வின் போது மநீம துணை தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.