March 19, 2021
தண்டோரா குழு
கோவையிலுள்ள நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதன் தலைவர் கமல்ஹாசன் அறிக்கையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றினால் வளமான தமிழகத்தை கொண்டு வர முடியும் என்று கூறினார்.
தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்ட பின்னர் அது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய அக்கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ், வரி வருமானத்தில் இருந்து வளர்ச்சி பாதையில் செல்லும் வகையில் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவக்க முடியும் என்றும் கூறினார்.தனி நபர் வருமானம் 60ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உயரும் எனவும் நீட் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் தெரியாமல் தமிழக அரசு உள்ளது என்றும் தெரிவித்தார்.
பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளரின் வரி ஏய்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன்,வருமான வரி சோதனையில் சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் தனி மனிதரும் கூட எனவும் எங்கள் கட்சியில் எந்த தவறும் நிகழவில்லை எனவும் கூறினார்.மத்திய அரசின் கட்சியில் இருப்பவர்கள் தவிர அனைவரின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் இது தேர்தல் அழுத்தமாக கூட இருக்கலாம் எனவும் பதிலளித்தார்.வருமான வரி செலுத்தாதது உறுதியானால் கட்சி சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகங்களின் அழுத்தம் காரணமாக எதுவும் செய்ய முடியாது என்றும் கூறினார்.
மேலும் தமிழக அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என்றும் திட்டங்கள் முழுமையடையவில்லை என்றும் குற்றம் சாட்டியதுடன் மக்களின் பணத்தை சூறையாடுதல் நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.இதேபோல் தேர்வில்லாமல் கல்வி வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமிதான் சரியான நபர் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.