March 13, 2021
தண்டோரா குழு
ஏசிசி சிமெண்ட் ஆலை வளாகத்தில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அடிக்கடி சரக்கு ரயில் விபத்திற்குள்ளாகும் சம்பவம் தொடர்கிறது.
கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதன் ஆலை நிர்வாகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன.ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிமெண்ட் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இன்று காலை க்ளிங்கர் ஏற்றி வந்த ரயில்வே வேகன் கம்பெனியின் உள்ளே இருந்த இரண்டு கேட்டுகளை உடைத்தெரிந்து விட்டு மயில்சாமி என்பவரின் தோப்பிற்குள்ளே சரிந்து விழுந்தது.
கடந்த வாரம் இதே போல் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று ரயில் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிமெண்ட் ஆலை நிர்வாகம் முறையான பராமரிப்பு செய்யாததே அடிக்கடி விபத்து ஏற்பட காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.மேலும் இந்த பாதை வழியாக துப்புரவு பணியாளர்கள் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
ஆலை நிர்வாகம் தொடர் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.