March 12, 2021
தண்டோரா குழு
சலுகைவரி சான்றிதழ் மற்றும் இந்தியா ஏற்றுமதிக்கான மூலச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் கொடிசியா சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியதாவது:
கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது உலகெங்கும் பொருளாதார நடவடிக்கைகள் சீரடைந்து, இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் ஏற்றுமதி வாய்ப்புகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் ஏற்றுமதி வணிகம் நல்ல முறையில் நடைபெறும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இரண்டு நாடுகளுக்கு இடையேயுள்ள இருதரப்பு ஒப்பந்தம் என்பது ஏற்றுமதியின் போது மூலச் சான்றிதழாக கருதப்படும். சார்க் நாடுகள், ஆசியான் அமைப்பு நாடுகள், ஆசிய பசிபிக் நாடுகள், கொரியா, ஸ்ரீலங்கா உள்ளிட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பல்வேறு வணிக ஒப்பந்தங்களை செய்து கொடுத்துள்ளது. அவற்றின் அடிப்படையில், இறக்குமதி செய்யும் நாடுகள் இறக்குமதி பொருட்களுக்கான வரிச்சலுகை சான்றிதழ் ஏற்றுமதி ஆய்வு முகமை மூலம் வழங்கப்படுகின்றன.
கடந்த காலத்தில், இந்த சான்றிதழ் வேண்டி, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த அதே நாளில் வழங்கப்பட்டு வந்தது.ஆனால் சமீப காலமாக, இந்த சான்றிதழ் வழங்குவது காலவரையரையின்றி தாமதப்படுத்தபடுகிறது. இந்த தாமதம் இயல்பாகவே ஏற்றுமதி செய்வதை பாதிக்கிறது.இந்த சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால்,அந்நிய செலாவணி மிகவும் தடைப்படுவதோடு, ஏற்றுமதி லாபகரமானதாக இல்லாமலும், நிரந்திர வாடிக்கையாளர்களை இழந்துவிடவும் நேரிடும். மேலும் தற்போது எழுந்துள்ள சரக்கு பெட்டகத்துக்கான கடுமையான தட்டுபாடு, ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொட்ருகளை ஏற்றுமதி செய்வதை சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது.
இதன் மூலம் அந்நிய செலாவணியை இழப்பதோடு, ஏற்றுமதியாளர்கள் வாடிக்கையாளர்களை கூட இழக்கும் நிலை உருவாகி விடும். உடனே மத்திய அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.