March 4, 2021
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இதுகுறித்து அதன் ஒருங்கின்ணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது:
மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக, சிறு,குறு தொழில் நிறுவனங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மூலப்பொருட்கள் விலையை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்காக கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
குறுந்தொழில் முனைவோர்கள் செய்து கொடுக்கும் ஆர்டர்களுக்கு, உற்பத்தி நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் அதற்கான தொகையை தர வேண்டும். சுமார் 20 ஆயிரம் குறுந்தொழில் முனைவோர்கள் வாடகை கட்டிடங்களில் தொழில் நடத்தி வருகின்றனர். எனவே கோவையின் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தொழிற்பேட்டை அமைத்து தரவேண்டும். அதில் அரசு அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி தரவேண்டும். மேலும் மானிய விலையில் தொழிற்கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகள் 8 சதவீதம் வட்டியில் கடன் வழங்க வேண்டும். அதனை திருப்பி செலுத்த 15 வருடம் அவகாசம் அளிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.