February 27, 2021
தண்டோரா குழு
கோவை காந்திமா நகரை சேர்ந்த கென்னி என்ற பள்ளி மாணவன் தொடர்ந்து 12 மணி நேரம் பறையிசைத்து பீனிக்ஸ் புக் வேர்ல்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்த எல்வின் ,ப்யூலா ஹெப்சிபா தம்பதியரின் மகன் கென்னி தியோபெலஸ். அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும்,அதே பகுதியில் கிராமிய கலைகளை இலவசமாக கற்று தரும் கிராமிய புதல்வன் அகாடமியில் பறை இசைக்க பயிற்சி பெற்றுள்ளார். இவருக்கு பறையிசைக்க கற்று கொடுத்து வந்த கிராமிய புதல்வன் டாக்டர் கலையரசன் இவரது ஆர்வத்தை பார்த்து இவருக்கு உலக சாதனை புரிய ஊக்கம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தாம் கற்ற பறையிசையில் புதிய சாதனை படைக்க விரும்பிய கென்னி, தொடர்ந்து 12 மணி நேரம் பறையிசைத்து பீனிக்ஸ் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம் பெற்றுள்ளார். முன்னதாக சாதனை நிகழ்வை பிரபல ஓசோன் யோகா மைய பயிற்சியாளர் பாலகிருஷ்ணன், மற்றும் யோகாவில் பல்வேறு விருதுகள் வாங்கிய நிரஞ்சன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதற்கு முந்தைய சாதனையாக பத்து மணி நேர சாதனையை முறிக்கும் வகையில் இந்த சாதனையை செய்ததாக சாதனை மாணவர் கென்னி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 12 மணி நேரம் பறையிசைத்து சாதனை செய்த பள்ளி சிறுவனுக்கு பீனிக்ஸ் புக் ஆப் சாதனை புத்தகத்தின் நிறுவனர் டாக்டர் கலையரசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.