February 14, 2021
தண்டோரா குழு
கோவை மணியகாரன் பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கொங்கு குடும்ப விழா நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்புரையாற்றிய அக்கட்சியின் கொண்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவது எந்த வகையில் நியாயம் என தெரிவித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை மாநில அரசு கவனிக்கிறா என கேள்வி எழுப்பிய அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக குற்றம்சாட்டினார். தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தேவர் சமூகம் குறித்து சட்டத்துறை அமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு, எந்த சமூகத்தையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், அத்தகைய பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார்.
சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு 50 தொகுதிகளில் முடிவுகளை மாற்றும் சக்தி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு உள்ளது அனைவருக்கும் தெரியும் எனவும், அதனால் எங்களது வலிமைக்கு ஏற்றவாறு தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார். சிறு குறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அதற்கு எந்த தீர்வும் தற்போதைய மத்திய பட்ஜெட்டில் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய ஈஸ்வரன், வேலையில்லா திண்டாட்டத்தை எந்தவித தீர்வும் இல்லை என தெரிவித்தார்.
குல வெள்ளாளர் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் உள்ளது எனவும் தேர்தலுக்காக மத்திய மாநில அரசுகள் இதை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் 55 சதவீத மக்கள் உள்ள நிலையில் 26.5 சதவீத ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது எனவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு குறைந்தபட்சம் 40 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.