February 14, 2021
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விஷ்ணுபிரபு 25 நிமிடங்களில் ஆயிரம் தடவை அப்டமன் ஃபோல்டப்ஸ் எனும் கராத்தே உடற்பயிற்சி செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்ணுபிரபு. பொறியியல் படித்து வரும் இவர் சிறு வயது முதலே கராத்தே கலை பயின்று அதில் கருப்பு பட்டையம் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் 30 நிமிடத்தில் கராத்தேவில் செய்யப்படும் அப்டமன் ஃபோல்டப்ஸ் எனும் உடற்பயிற்சியை ஆயிரம் தடவை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இதற்கான துவக்க நிகழ்ச்சியில் எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ஞானசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.மாணவரின் சாதனை முயற்சியை நோபள் சாதனை புத்தகத்தின் வெளியீட்டாளர் தியாகு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அடிவயிறு குறைய செய்யப்படும் இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து அரை மணி நேரத்தில் செய்ய முயற்சி செய்த இவர் குறிப்பிட்ட அரை மணி நேரத்திற்கு முன்னதாக 25 நிமிடங்கள் நான்கு நொடிகளில் ஆயிரம் தடவை செய்து உலக சாதனை செய்தார்.
இவரது இந்த சாதனை நோபள் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதை அடுத்து தீர்ப்பாளர் லுக்கேஸ்வரன் சாதனை மாணவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.உலகிலேயே கராத்தேவின் உடற்பயிற்சியான அப்டமன் ஃபோல்டப்சில் இந்த சாதனையை செய்த முதல் இளைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.